Monday 2 November, 2009

பேராண்மை திரைப்படம்

பேராண்மை திரைப்படம் என்னுள் ஏற்படுத்திய எண்ணங்களை பகிர்ந்துகொள்ளும் ஒரு முயற்சி...

நமது திரைப்படங்கள் இரண்டரை மணி நேரம் என்ற எழுதப்படாத சட்டத்தில் சிக்கி ஐந்து பாடல்களால் நேரத்தை பூர்த்தி செய்யும் வேளையில், பழங்குடியினர் வாழ்வியல் சவால்கள், அந்த சமூகத்தில் இருந்து பட்டதாரியாகும் நமது கதாநாயகன் தீவிரவாதிகளிடம் இருந்து நமது ராக்கட் ஏவு தளத்தை காப்பாற்ற சந்திக்கும் சவால்கள் என்று இயக்குனர் நேர்த்தியாக இரண்டரை மணிநேரத்தை கையாண்டுள்ளார்...

ஹீரோவும் வில்லனும் ஆயதங்களாக துப்பாக்கிகளை கையில் ஏந்த,இயக்குனர் வசனங்களை ஆயுதமாக ஏந்தி மனதில் தனி இடம் பிடிக்கிறார்.... துறுவனும் மற்ற ஐந்து NCC மாணவிகளும் செல்லும் வாகனம் ஒருகட்டத்தில் பள்ளத்தில் ஓட, "இப்ப வண்டிக்கு பிரேக் போடாத ,வண்டி கவிழ்ந்துவிடும் கியர் மூலம் மட்டும் தான் வண்டியை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரமுடியும்" போன்ற உண்மையில் நமக்கும் ஆபத்துக்காலத்தில் உதவும் செய்திகள். படம் நெடுகிலும் இது தொடர்வது மிகுந்த சுவாரஸ்யத்தை தருகிறது...காட்டு வழியில் திரும்பி வரும்பொழுது வழியை அடையாளம் காண துறுவன் ( ஜெயம் ரவி ) செய்யும் நூதனங்கள் மற்றொரு எடுத்துக்காட்டு.

"அந்த காலத்து பொண்ணுங்களுக்கு முந்தானையை சரிசெய்தே நேரம் போச்சு இந்த காலத்து பொண்ணுங்களுக்கு தலைமுடியை விலக்கி விலக்கியே நேரம் போச்சு".....வசனங்கள் ரசிக்க வைக்கும் நேரத்தில் ,பழங்குடி இன சிறுவர்களை காவல்துறை உனக்கெல்லாம் படிப்பு தேவையா என்று அடிக்கும் சமயத்தில் " எல்லாரும் படிக்கறதுக்காக அடிப்பாங்க இவங்க படிச்சிட்டு வந்து அடிக்கிறாங்கன்னு" சிறுவன் சொல்லும் வசனங்கள் நம்மை உலுக்கி எடுக்கிறது.....

குறைகள் கொஞ்சம் இருப்பதாக தோன்றினாலும் அந்த அளவிற்கு எனக்கு ஒன்றும் பெரிதாய் படவில்லை ...ஒரு விறுவிறுப்பான படம் பார்த்த திருப்தி கிடைத்தது...அனைவரும் தவறாமல் திரையரங்கில் பார்க்க வேண்டிய படம்....

Tuesday 27 October, 2009

"Clash of the Titans"

புராண கற்பனைகதைகளுக்கு பெயர் போன நாடு கிரேக்கம்.அக்கதைகளில் ரொம்பவே பிரபலமான கதாபாத்திரம் பர்சியஸ். இந்த கதாபாத்திரத்தை மையமாக கொண்ட ஒரு புராணக்கதையைத்தான் "Clash of the Titans" என்ற பெயரில் 1981 யில் Deshmond devish -ஆல் படமாக எடுக்கப்பட்டிருக்கிறது,தந்திரக்காட்சிகள் (Special effects) Stopmotion என்ற தொழிநுட்பத்தின் மூலம் Ray Harryhausen -ஆல் எடுக்கப்பட்டிருக்கிறது.

தன் மகளுக்கும் கிரேக்க கடவுள்களில் ஒருவரான ஜியுசிற்கும் பிறந்த குழந்தை "பர்சியஸால்" தன் உயிருக்கு ஆபத்து என்று "ஆரகில்" என்று கிரேக்கத்தில் அழைக்கப்படும் குறிசொல்லும் தேவதைகள் மூலம் தெரிந்துகொண்டதால் அரசன் தன் மகளையும் அவளின் குழந்தையையும் உயிருடன் சவப்பெட்டியில் அடைத்து கடலில் வீசப்படுவதுடன் படம் ஆரம்பமாகிறது....

இதனால் கடுங்கோபமான கடவுள் ஜியுஸ் கடல் இராட்சசன் க்ரேகனை அந்நாட்டின் மீது ஏவிவிட கட்டளையிடுகிறார்...இடைப்பட்ட காலத்தில் தாயும் பர்சியஸும் ஒரு தீவில் கரைஒதுங்குகிறார்கள்...

கதாநாயகன் பர்சியஸ் , " தேடிஸ் " என்னும் பெண்தெய்வத்தின் மாயையால் ஜாபா என்ற நாட்டிற்கு நாடுகடத்தப்படுறாறு ...அந்நாட்டின் இளவரசியின் ஆழ்மனம் , கடவுள் ஜியுசால் சபிக்கப்பட்ட காளிபஸ் என்னும் இராட்சசன் கட்டுப்பாட்டில் இருக்கிறது... இளவரசியால் கேட்கப்படும் கேள்விக்கு பதில் சொன்னால் மட்டும்தான் இளவரசிக்கு திருமணம் நடக்கும் என்ற சாபத்துடன் இருக்கிறார், இந்த போட்டியில் தோற்கிறவர்களை உயிரோடு எரித்துவிடுகிறார்கள்.

விடுகதைக்கு எப்படி விடை கண்டுபிடித்து இந்த இக்கட்டான நிலைமையில் இருந்து இளவரசியை எப்படி நம்ம கதாநாயகன் காப்பாத்தராருங்கரதை படத்தின் முதல் பாதியில் சுவாரஸ்யமான திரைக்கதையாலும் பறக்கும் குதிரை,பிரம்மாண்ட கழுகு,மாயமாக மறைய வைக்கும் தலைக்கவசம்,காளிபஸ் இராட்சசன்(பெண்தெய்வம் தேடிஸின் மகன்) என்று படம் விறுவிறுப்பாக செல்கிறது ...

இளவரசியை கதாநாயகன் பர்சியஸ் திருமணம் முடிக்கும் தருணத்தில் இளவரசியின் தாய் தன் மகளின் அழகை தேடிஸ் பெண்தெய்வத்தின் அழகோடு கர்வத்தோடு ஒப்பிடுகிறார்....ஏற்கனவே தன் மகன் காளிபசின் சாப நிலைமை கண்டு ஏற்கனவே கடுப்பில் இருக்கும் தேடிஸ் ,ராணியின் இந்த கர்வத்தால் கடுன்கொபமாகிறார்.அதனால் அங்கிருக்கும் தேடிஸின் பிரமாண்ட சிலை சுக்கு நூறாக உடைகிறது,அப்பொழுது தலை மட்டும் உயிர்பெற்று இன்னும் 30 நாட்களில் இளவரசியை கடல் ராட்சசன் கிரேகானிற்கு கொடுக்க வேண்டும் தவறினால் ஜாபா நாடு அழிக்கப்படும் என்று சாபமிடுகிறார்....

இந்த இக்கட்டான நிலையில் தப்பிக்க வழி தெரியாமல் இருக்கும்பொழுது இயந்திர தங்க ஆந்தை ஒரு பெண்தெய்வத்தால் கதாநாயகனிற்கு உதவி செய்ய அனுப்பி வைக்கப்படுகிறது...


அதன் வழிகாட்டுதலின்படி சூனியகாரிகளை சந்தித்து க்ரேகானை அழிக்க வழி கேட்டு மெடுசா தான் ஒரே உபாயம் என்று தெரிந்துகொள்கிறான்.....மெடுசா ஒரு சபிக்கப்பட்ட ஒரு பெண், உருவத்தில் குதிரையின் உடம்பும் பாம்பின் வாலும், தலை முழுவதும் பாம்புகள் நெளிந்துகொண்டிருக்கும் இராட்சசி,இவள் உற்று பார்க்கும் பார்வையில் கல்லாக மாறிவிடுவார்கள்....அதனால் மெடுசாவை கொன்று தலையை க்ரேகானை நோக்கி காட்டினால் க்ரேகானும் கல்லாக மாறுவதில் இருந்து தப்ப முடியாது....

பார்வையாலேயே கல்லாக்கிவிடும் சக்திவாய்ந்த மெடுசாவை கதாநாயகனால் எப்படி கொல்ல முடிந்தது....காளிபசால் கொடுக்கப்படும் இடைஞ்சல்களான இராட்சச தேளுடன் வரும் சண்டை காட்சிகள்,கடல் இராட்சசன் க்ரேகான் கல்லானதா ,இளவரசி மீட்கபட்டாளா என்பது சுவாரஸ்யமாக படமாக்கியிருக்கிறார்கள்.

Wednesday 3 June, 2009

ஊகேஜிலருந்து பஸ்டேண்டு எவ்வளவு தூரம்??

கோடைவிடுமுறை முடிந்து பள்ளி திறப்பதற்கு முதல் நாள் இரவு என் அக்கா பையன்களுடன் அலைபேசியில் பேசினேன்...துயரத்தின் எல்லையில் இருந்த சின்னவன் என்ன ஸ்டாண்டர்ட் போர என்று நாலுமுறை கேட்டவுடன் சொன்னான் ஊகேஜிலறுந்து பஸ்டேண்டு என்று சொல்லிட்டு அலைபேசியை அவன் அண்ணனிடம் கைமாற்றிவிட்டான்..

டேய் இப்ப ஏன்டா பஸ்டேன்டு போறீங்க?? னு கேட்டதற்கு மாமா அவன் UKG இருந்து 1st ஸ்டாண்டர்ட் போறான்னு சொல்றான் மாமா என்றான்...மழலை மொழி இன்னும் மாறவில்லை...

நீ என்ன ஸ்டாண்டர்ட் என்று பெரியவனிடம் கேட்டேன் ஐந்தாவது அத்துடன் வாக்கியத்தை முடித்துகொண்டான்,என்ன Section என்று கேட்டதற்கு நாளைக்கு போனாதான் தெரியும் என்று சொன்னான்...டேய் நாலாவது என்ன Section?? C தானே, அப்படினா 5th C section என்று சொன்னதற்கு எங்க ஸ்கூல்ல நாளைக்கு போனாதான் தெரியும் மாமா என்றான்...

சரி பேச்சை மாத்தலாம் என்று , ரொம்ப நாளைக்கப்புறம் உன்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் பாக்க போற ஒரே ஜாலி தான்,எல்லாரும் வருவாங்க தானே என்றேன் ?? வருவாங்க ஆனா கொஞ்சம் பேறுதான் என்னோட section-க்கு வருவாங்க...மத்தவங்க வேற section போய்டுவாங்க என்றான்...அதுக்கப்புறம் தான் தெரிந்தது அவர்கள் பள்ளியில் இருக்கும் நடைமுறைகள்,உயரம் வைத்து உட்கார வைக்கும் முறை அங்கு இல்லை,ஒரே கிளாஸ்ல கூட ஒரே பென்ச்ல மூன்று மாதத்திற்கு மேல் உட்கார முடியாது, மாற்றிவிடுவார்களாம் ,காரணம்..பசங்க செட் சேந்துர கூடாதென்பதற்கு பள்ளி தாளாளரின் முடிவு....

உளவியல் ரீதியாக இது எந்தவிதமாக சிறார்களை பாதிக்கும்,நன்மையா ? தீமையா? என்று எனக்கு தெரியவில்லை ,எனது கணிப்புகள் சில

1. ஆனால் வகுப்பறையில் இருக்கும் அனைத்து மாணாக்கர்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்படுகிறது....

2. முதல் பெஞ்ச் படிப்பாளி கடைசி பெஞ்ச் அராது(அட்டூழிய பேர்வழி)முத்திரைகள் களையப்படுகிறது...எல்லாரும் படிப்பாளிதான் (யாருப்பா அது பப்பாளினு படிக்கறது)என்ற பாசிடிவ் திங்கிங் வரும் என்பது என் எண்ணம்...

நான் எனது சக வகுப்பு மாணவர்களை பிரிந்தது மொத்தம் மூன்று முறை தான்

ஐந்தாவதில் இருந்து ஆறாவது (உயர்நிலை பள்ளிக்கு) சென்ற பொழுது இழந்தது சிலர்,SSLC முடித்து பதினோராம் வகுப்பில் 1st group சேர்ந்தபொழுது சிலர் , உயர்நிலை பள்ளியில் இருந்து கல்லூரிக்கு சென்ற பொழுது இழந்தது பலர்...அவ்ளோதான் நம்ம சரித்தரம்....

என்ன பாக்கிறீங்க ,அப்ப எல்கேஜி ஊகேஜி படிக்கலயானுதானே ???

ஹி ஹி ஹி மரத்துல தலைகீழ தொங்கி கீழ விழுந்து கை உடைஞ்சதால..... அப்டின்னு சொல்றதவிட ,புத்திசாலிங்கரதால டைரக்ட் ஃப்ஸ்ட் ஸ்டாண்டர்ட் னு மிதப்பா சொல்லிக்கலாம் ...எல்கேஜி கொஞ்ச காலம் படிச்சப்ப ஆயா காலைல கூப்ட வரும்போது என்னைய யாராலையும் கண்டுபிடிக்க முடியாதாம்...நான் வீட்ல எங்க ஒளிஞ்சு இருப்பேன்னு சொல்லுங்க பார்ப்போம்...( பாத்ரூம் கிடையாது )

Wednesday 27 May, 2009

நான் மனிதன் தானா ???

தமிழ் ஊடகங்களும் ஆங்கில ஊடகங்களும் ,ராஜபக்ஷேயையும் புலித்தலைவர் பிரபாகரனையும் தன் முக்கிய செய்திகளாக மக்களுக்கு எடுத்துசென்றுகொண்டிருந்த வேளையில்...நானும் வருத்தத்தில் மூழ்கிபோனேன் தொடர்ந்து வந்த செய்திகளில் சர்ச்சைகளிலும்,தோல்வியிலும்...அடுத்த நாள் செய்திக்காக மீண்டும் காத்திருந்தேன்...

தமிழன் தானே அப்படிதான் இருந்தேன்..பக்கத்துக்கு நாட்டில் நடந்தால் எனக்கு செய்தி,பக்கத்துக்கு மாநிலத்தில் நிகழ்ந்தால் எனக்கு செய்தி,பக்கத்து ஊரில்,பக்கத்து தெருவில், பக்கத்து வீட்டில் நடந்தாலும் அது எனக்கு செய்திதான் ...என்வீட்டில் நிகழ்ந்து என்னை என்ன சேதி என்று கேட்கும் வரை எனக்கு அனைத்தும் செய்தி செய்தி....

கருகிய குழந்தையை மடியிலும் கலங்கிய குழந்தையை தோளிலும் போட்டுக்கொண்டு கதறிய ஈழத்தாயின் புகைப்படத்தை பார்த்தபொழுது,என் கண்ணீர் என்னை இகழ்ந்தது.....

வெகு சிலரால் ஊடகங்கள் வாயிலாக (திரு.ஞானியும்,திரு.மாலன்..., ) மக்களுக்கு முன்வைக்கப்பட்ட இருட்டடிப்பு செய்யப்படும் விசயங்களை நான் அறிந்தபொழுது .... எனக்கு செய்திகளாக பெரும்பான்மை ஊடகங்கள் முன்வைத்த (திணித்த)விஷயங்களின் போலித்தன்மை புரிந்தது,ஊடகங்கள் கைக்கூலிகளாக பயன்படுத்தபடுவதும் புரிந்தது....

இருட்டடிப்பு செய்யப்பட்ட,இறையாண்மையை பாதிக்காத வகையில் மனிதபிமான அடிப்படையில் மாநில மத்திய அரசுகள் செய்யத்தவறிய விஷயங்கள் என்னை மிகவும் வேதனைபடுத்துகிறது தினமும்....

உங்களுக்கு விருப்பம் என்றால் செல்லலாம் என்று விடுதலை புலிகள் தரப்பில் சொன்ன பிறகு வன்னி காடுகளில் இருந்து இலங்கை அரசின் முகாம்களுக்கு தகப்பன்,தாய்,மகள்,மகனுடன் வந்த குடும்பங்களை நிர்வாணப்படுத்தி 4 கி.மீ வரை நடக்க வைத்திருக்கிறார்கள் காட்டில் ........கேட்டதற்கு விடுதலை புலிகள் ஊடுருவி விடகூடாதென்பதற்காம்...

இந்தக்கொடுமை முன்பே தெரிந்துதான் கடலன்னை அன்றே வந்தாலோ சுனாமியாக, வந்தெடுத்து அவள் மடியில் போட்டுக்கொண்டு என் இனம் மானம் காக்க,...இது புரியாமல் அப்பொழுதெல்லாம் திட்டிதீர்தேனே கடலன்னையை.....

திறந்த வெளி முகாம்களில் அனுமதிக்கும் பொழுதும் சிறார்கள்,ஆண்,பெண் என்று பிரிக்கப்பட்டு குடும்பங்களை சிதறடித்திருக்கிறார்கள்...இது ஏன் என்று கேட்டதற்கும் முகாம்களுக்கு வரும் நபர்களின் பெயர் பட்டியல் தயாரிக்க செஞ்சுலுவை சங்க பிரதிநிதியையாவது அனுமதியுங்கள் என்பதற்கும் பதில் இல்லை அரசு தரப்பில்..இந்த ஒரு உதவியாவது ,செஞ்சுலுவை சங்க பிரதிநிதியை பட்டியல் தயாரிக்க இந்தியா இலங்கை அரசை நிர்பந்தித்து அனுமதி வாங்கி தந்திருந்தால் கூட போதும் முகாம்களில் இராணுவத்தால் காணாமல் போகும் ஈழ தமிழர்களின் எண்ணிக்கையை குறைத்திருக்கலாம்...

இளைஞர்களை புலிகள் என்று சந்தேகிப்பதாக கூறி அழைத்து சென்று, பௌத்த பூமியான சிறீலங்காவின் பணக்கார வியாதியஸ்தர்களின் பழுதுபட்ட உள்ளுறுப்புகளை மாற்ற என் ஈழ தமிழ் இளைஞனின் உடல்களை கூறு போடுகிறார்களாம்...இளைஞனுக்கு இந்த கதியென்றால் ஈழத்தமிழச்சியின் நிலை சொல்லி புரிய வைக்க வேண்டியதில்லை...

ஒபாமாவும் வன்மையாக கண்டித்தது இதைதான்,போர் இலங்கை இராணுவத்திற்கும் புலிகளுக்கும்...இதில் தலையிட நான் விரும்பவில்லை ஆனால் அப்பாவி பொதுமக்கள் ஏன் சூறையாடபடுகிறார்கள்....அமெரிக்கருக்கு புரிந்தது அண்டை நாடான இந்தியாவிற்கு புரியாதா??

தலைவா ,தமிழ் வருட பிறப்பு இனி சித்திரை இல்லை தை என்றாய் ஆமாம் என்றேன்,,சில காலம் கழித்து தை இல்லை சித்திரை தான் என்றாய் ஆமாம் என்றேன்,..பிரபா என் நண்பன் என்றாய் ஆமாம் என்றேன்.,,இல்லை இல்லை அவர் என் நண்பன் இல்லை என்றாய் அதற்கும் ஆமாம் என்றேன்...மத்தியிலும் மாநிலத்திலும் கூட்டாட்சி இருந்தால் தமிழர்களுக்கு நல்லது என்றாய்,ஆமாம் என்று தேர்தலில் வெற்றிபெற வைத்தேன்....

ஈழதமிழன் இனம் காக்க கடிதம் ,மத்தியில் பதவி வாங்க நான்கு நாட்கள் தலைநகரம் செல்கிறாய் நாற்பது நபர்களை சந்திக்கிறாய் ,வியாபாரம் படியவில்லை என்று கோபித்துக்கொண்டு திரும்புகிறாய்....சந்தித்த நாற்பதில் நால்வரிடம் ,அடைந்த கோபத்தில் நாலு சதவிகிதத்தை, இழக்க வேறெதுவும் இல்லாமல் உயிரை மட்டும் வைத்திருக்கும் ஈழ மக்களை காக்க செஞ்சுலுவை சங்கத்தையும்,மனிதஉரிமை சங்கத்தையும் முகாம்களில் அனுமதிக்க சிறீலங்க அரசை இந்தியா நிர்பந்திக்க கேட்டிருக்கலாமே ?.....போதும் தலைவா..உன் இனம் காக்கும் குணம் புரிந்துவிட்டது ...தமிழுக்கு தலைவனாய் இருந்துவிட்டு போ இனி தலைவனில்லை இந்த தமிழனுக்கு.....

ஜூனியர் விகடனுக்கு ஒரு பெங்களூர்வாசி பெண்மணி எழுதிய கடிதம்...பதினான்கு வருடங்களுக்கு முன்னாள் சொந்த வீட்டை விட்டு வன்முறையாளர்களால் விரட்டி அடிக்க பட்டதும்,ஒரே ஒருநாள் அகதியாக தான் பட்ட அவஸ்தைகள் பதினான்கு வருடம் கழித்தும் என் மனதை விட்டு அகலாமல் தன்னை வருத்துகிறது.அப்படியிருக்க நம் ஈழத்தமிழனின் நிலைமை என்னை மிகவும் கவலைக்குள்ளாக்குவதாக சொல்லியிருக்கிறார்....

ஒரே ஒரு நாள் அகதியாய் வாழ்ந்து பார்த்தால்தான் அந்த வலி புரியுமோ எனக்கு??...

இவ்வளவையும் பார்த்துகொண்டும் ,கேட்டுக்கொண்டும் இருக்கும் நான் தமிழன் தானா ???

என்று கேட்க போவதில்லை என் இயலாமைக்கு இறையாண்மையை கைகாட்டி என்னை மேலும் கொச்சை படுத்திக்கொள்ளவும் விரும்பவில்லை.... நான் கேட்பதெல்லாம் முதலில் நான் மனிதன் தானா ???

Monday 18 May, 2009

" பசங்க " திரைப்படம் பார்த்தேன் வியந்தேன்

தமிழ் திரையுலகம் காணாத கதைக்களம் என்று கேள்வி பட்டதால் சென்று பார்க்க ஆவலாய் இருந்தது...ரொம்ப நாளைக்கப்புறம் குடும்பம் குடும்பமாக திரையரங்கு நிரம்பியிருந்தது (சிறுவயதில் பார்த்ததாக நினைவு) மிகவும் ஆச்சரியமாக இருந்தது எனக்கு.......வித்தியாசமான சுழலில் (என்னை சுற்றி வாண்டுகள் நிரம்பி இருந்தார்கள்) படம் பார்த்தது இதுவே முதல் முறை எனலாம்...

படத்தின் பெயர் போடும் பொழுதே நம்மை நமது சிறுவயதிற்கு அழைத்து சென்று விடுகிறார் இயக்குனர்... ஜீவா,பக்கடா,குட்டி மணி இவர்களின் என்ட்ரி பட்டையை கிளப்புகிறது திரையரங்கில்...

சிறுவயதில் நாம் அனைவருமே பைக் ஓட்டியிருக்கிறோம் டுர் டுர் என்று...நமது இந்த நிகழ்வை இயக்குனர் படத்தில் கையாண்டிருக்கும் விதத்தில்,அப்பாவின் கைப்பிடித்து செல்லும் குழந்தை போல் நாமும் படத்தில் ஒன்றிவிடுகிறோம்.....

அன்புக்கரசு IAS பைக் ஓட்டுவது போல் பாவித்து வண்டியை கிளப்ப கையை முறுக்கும் பொழுது அவன் கையிடுக்கில் சூரியனை காட்டி ஒளிப்பதிவாளர் மிடுக்காக தோன்றுகிறார்....மேலும் ஒரு காட்சியில் அப்பத்தா என்று அழைக்கப்படும் கண்ணாடி அணிந்த சிறுவனை ஜீவா மிரட்டும் பொழுது கேமராவில் மூக்குகண்ணாடியை பொருத்தி அச்சிறுவன் பார்வையில் ஜீவாவை காட்டும் விதம் சபாஷ்....

அன்புக்கரசுவின் சித்தப்பாவாக (LIC ஏஜென்ட்) வரும் மீனாச்சி சுந்தரமும் ஜீவாவின் அக்கா ஷோபிகன்னு கதாபாத்திரமும் நம் மனதில் இடம் பிடிக்க தவறவில்லை..இருவருக்குமிடையான வம்பிழுக்கும் காட்சியில் கலகலப்பிற்கு குறைவில்லை... இரு குடும்பத்திற்கும் சிறுவர்களால் சண்டை வரும்பொழுது இவர்களின் தவிப்பு மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது...

இந்த சண்டையினால் தங்கள் காதல் கனவு நிறைவேறாது என்று வருந்தும் காட்சியில், நாம பழகுனதுக்கு ஒரு LIC பாலிசியாவது போட்டுக்கோ என்று மீனாட்சி சுந்தரம் சொல்லி கலகலப்பூட்டி காட்சியின் கடின தன்மையை சற்றே குறைத்தும் கமெர்சியல் படங்களுக்கான நேர்த்தியை மிகவும் லாவகமாக இந்த படத்தில் இயக்குனர் கையாண்டிருக்கிறார் என்று சொல்லலாம்...

பசிக்கும் தருனங்களில் "திங்க தேடுது" என்று பக்கடா சொல்லும் வார்த்தைகளும் ,தோள் மேல கை போடாதடா குட்டையாயிடுவேன்,ஏற்கனவே என்னையை குட்டி மணின்னு கூபிரானுங்க என்ற வசனங்களும் நம்மை எங்கோ அழைத்து செல்வது தவிர்க்க இயலாதது...

முதல் முறையாக ஒரு நல்ல பாடம் பார்த்த திருப்தியில் திரையரங்கை விட்டு வெளியேறினோம்...

சிறுவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு நல்ல பாடத்தை நாசுக்காக சொல்லிகொடுக்கும் இயக்குனரின் திறமை நம்மை மலைக்க வைக்கிறது...படம் முழுவதும் சுவாரஸ்யமான காட்சிகளால் நிறைத்து நம் மனதில் இடம் பிடிக்கிறார் இயக்குனர்...

சமீப காலமாக வந்த ஈரக்கொலை நடுங்கும் காட்சிகள் நிறைந்த படங்களை சிறுவர்களை வைத்தே கலாய்திருப்பது மிக அருமை ..

இயக்குனர் இப்படத்தில் கருப்பொருளாக கையாண்டிருக்கும் "சகிப்புத்தன்மை" யையும்....நம் எல்லோருடைய மனமும் ஏங்கிகிடப்பது ஒரு சின்ன பாராட்டுதலுக்காகத்தான் என்பதையையும் மிக இயல்பாக சொல்லியிருக்கிறார்...

இயக்குனர் பாண்டிராஜ் அவர்களுக்கும் அவருக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் இயக்குனர்-சசிகுமார் அவர்களுக்கும் இந்த சினிமா ரசிகன் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்...

பசங்க - நிஜங்க....


Wednesday 15 April, 2009

உங்கள் DVD பிளேயரில் டால்பி டிஜிட்டல் மட்டும் தான் உள்ளதா ?? DTS 5.1 ஆக மாற்ற விரும்புகிறீர்களா ???

நம்மிடம் ஒலி அமைப்பு (Sound System) முறைகளில் DTS சிறந்ததா ? டால்பி டிஜிட்டல் சிறந்ததா ? என்று கேட்டால்....என்னவென்று சொல்வோம் ? சிறிதும் தயக்கம் இல்லாமல் DTS ஒலி அமைப்பே சிறந்தது என்று...DTS சிறந்ததுதான் ஆனால் எந்த சந்தர்பத்தில் என்பதுதான் கேள்வி.....

முதலில் திரையரங்குகளில் எப்படி ஒளி, ஒலி அமைப்புகள் இருந்தது என்று பார்ப்போம்...பேசும் திரைப்படங்கள் வருவதற்கு முன் ஒளிசுருள் திரையரங்கிற்கு அனுப்பப்படும்...அதனை ப்ரொஜெக்டர் மூலம் திரையில் நிழற்படமாக காட்டப்பட்டு வந்தது..பின்னர் பேசும் திரைப்படங்கள் வெளியிடபடுவதற்காக, திரைபடத்தின் ஒலிசெய்திகள்(வசனங்கள்,இசை..) அந்த படத்தின் ஒளிசுருளின் பக்கவாட்டில் உள்ள துளைகளுக்கு இடையில் கருப்பு கோடுகளாக குறிக்கப்பட்டது...ப்ரொஜெக்டரில் இருந்து வரும் ஒளி இந்த கருப்பு பட்டிகளில் பட்டு ,நிறத்தின் அடர்திகளுக்கு ஏற்ப ஒளி குன்றி மறு பக்கத்தில் உள்ள ஒளி உணர்வி&சக்தி மாற்றி மூலம் மின்னோட்ட அலைகளாக மாற்றப்பட்டு அவை ஒலிப்பான்களிள் ஒலியாக மாற்றபடுகிறது.

டால்பி டிஜிட்டல் முறையில் திரைபடத்தின் ஒளிசெய்திகள் (வசனங்கள், இசை, சுற்றுப்புற சத்தங்கள்....) ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டு அவைகள் ஒளிசுருளின் பக்கவாட்டில் புதிய முறைப்படி நிற பட்டைகளாக குறிக்கப்படுகிறது.... அவைகள் திரையரங்குகளில் தனி தனி 6 ஒலிப்பான்களிள் வெளியிடபடுகிறது.

DTS ஒலி முறையில் ஒலிசெய்திகள் ஒளிசுருளின் பக்கவாட்டில் குறிக்கப்படாமல் தனி காம்பேக்ட் டிஷ்குகளில் பதியப்பட்டு தனியாக திரையரங்கிற்கு வருகிறது. படமும் சப்தங்களும் புதிய தொழிநுட்பத்தின் உதவியுடன் ஒன்றிணைக்கப்படுகிறது..இதனால் மொழி மாற்ற படங்களுக்கு தனி தனி ஒளிசுருள் தயாரிக்கவேண்டிய செலவுகள் குறைகிறது....

ஆக விஜயகாந்த் சின்னகவுண்டர் திரைப்படத்தில் பஞ்சாயத்து காட்சியில் சொல்வது போல( "இவர் குஸ்தி போட தெரிஞ்ச குஸ்தி வாத்தியாரே தவிர பாடம் சொல்லி தர கணக்கு வாத்தியார் இல்லைன்னு" ) , இவையிரண்டு தொழில்நுட்பங்களும் திரைஅரங்குகளில் பயன்படுத்த உருவாக்கபட்டவைகளே தவிர DVD களில் ஒலி செய்திகளை பதிய உருவாக்கப்படவில்லை...

DVD களில் இவை இரண்டும் நம்மால் பிரித்தறிய முடியும் அளவிற்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்துவதில்லை என்பதே உண்மை......

Saturday 11 April, 2009

டெக்னாலஜி இம்ப்ரூவ்டு டூ மச்.....

அதிகாலை 6 மணிக்கெல்லாம் எழுந்துவிட்டேன், எப்படியும் இன்று பணத்தை ஐசிஐசிஐ வங்கியில் 9 மணிக்குள் என் சேமிப்பு கணக்கில் போட்டுவிட வேண்டும் என்று அவசரமாக கிளம்பி, வண்டியை கிளப்பிக்கொண்டு திருச்சி சாலையில் உள்ள ஐசிஐசிஐ வங்கிக்கு 8 மணி அளவில் சென்றுவிட்டேன் வங்கியை திறந்து இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்......

வங்கியும் திறந்தே இருந்தது கண்டு சுக்கிரன் என் பக்கம் தான் என்று உள்ளே நுழைந்து சலானையும் பூர்த்தி செய்து விட்டாயிற்று ஆனால் அங்கு காசோலை டெபாசிட் செய்யும் தானியங்கி எந்திரத்திற்கு நிற்கும் வரிசையை தவிர யாரும் இல்லை....எண்ணிய பணத்தையே 101 வது தடவையாக எண்ணியாயிற்று, சலானையும் சரிபார்தாயிற்று ஆனால் அலுவலர்களை காணவில்லை....

பொறுமையிழந்து வங்கி வாயிலில் நின்றியிருந்த காப்பாளரை விசாரித்ததில், அவர் உள்ளே நிற்கும் வரிசையில் நின்று பணத்தை தானியங்கி எந்திரத்தில் செலுத்த சொன்னார்...அப்பொழுதுதான் புரிந்தது அது காசோலை செலுத்தும் எந்திரம் இல்லை பணம் செலுத்தும் தானியங்கி எந்திரம் என்று....

அவசரமாக உள்ளே சென்று பார்த்தபொழுது வரிசையில் நாலைந்து பேரும் , அட்டு பசங்களுக்குத்தான் லட்டு மாதிரி பெண்டாட்டி கிடைப்பாள் என்பதை மெய்யாக்கும் விதமாக ஒரு ஜோடியும் நின்று கொண்டிருந்தது...அவசரமாக வரிசையில் நிற்க முயன்றபொழுது இடுப்பில் கைலியும் முகத்தில் கிலியுடனும் வந்த ஆசாமியால் பின்னுக்கு தள்ளபட்டேன்....

வரிசை முன்னேறிக்கொண்டு இருந்து, ஒரு பிரதிநிதி தானியங்கி எந்திரத்தில் பணம் செலுத்த உதவி செய்துகொண்டு இருந்தார். ஆசுவாசப்படுத்திக்கொண்ட கிலி ஆசாமி என் கையில் இருந்த சலானை கவனித்துவிட்டு, இதுக்கு எதுவும் வேண்டாம் தம்பி என்று நமட்டு சிரிப்பு சிரித்தார் .... அதனால் சலானை மடித்து சட்டை பையில் வைத்துக்கொண்டு வரிசையை கவனித்தேன்...அந்த ஜோடி வைத்ததில் ஒரு ஐநுறு ரூபாயை எந்திரம் அடையாளம் கண்டுகொள்ள முடியாதலால் மீதமுள்ள பணத்தை மட்டுமே செலுத்த முடியும் என்று பிரதிநிதி சொல்லக்கேட்டது என் மனதை சற்றே மகிழ்வித்தது.....

நமக்கும் இது நடந்து விடக்கூடாது என்று அவசரமாக இரண்டு மூன்று நோட்டுக்களை அதிகமாக எடுத்துக்கொண்டு இருந்தபொழுது , கிலி ஆசாமிக்கு பணம் செலுத்த அந்த பிரதிநிதி உதவி செய்துகொண்டு இருந்தார்... நேரம் கரைந்து கொண்டு இருந்தது , 9 மணிக்கெல்லாம் இங்கிருந்து கிளம்பினாள்தான் அலுவலகத்திற்கு 9.30 மணிக்குள் செல்ல முடியும் என்று நினைத்துகொண்டிருக்கும் பொழுது பிரதிநிதி சத்தமாக கிலி ஆசாமியிடம் என்னமோ சொல்லிகொண்டிருந்தார்.....

" யோவ் இதுக்கு சலான் தேவை இல்லைதான் ஆனா யாருக்கு பணம் போட வேண்டுமோ அவருடைய வங்கிகணக்கு எண் கூட இல்லை என்றால் எப்படீங்க பணம் போட முடியும் ".... என்று சொல்லிக்கொண்டே என் பணத்தை வாங்கி எந்திரத்தில் செலுத்தி வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்ததுதான் தாமதம் உடனே குருஞ்செய்தி ஐசிஐசிஐ வங்கியில் இருந்து வந்து விட்டது என் கணக்கில் அந்த பணம் வந்து விட்டதாக.........

சாதனை புரிந்துவிட்ட மமதையில் வண்டியில் சாகசம் புரிந்துகொண்டு அலுவலகம் அடைந்துவிட்டேன் முதல் ஆளாக..........

Tuesday 31 March, 2009

ஐந்து ரூபாயும் ஐம்பது பைசாவும்.....



வழக்கம் போல மெஸ்ஸில் காலை சிற்றுண்டியை முடித்தபின் பணத்தை கொடுத்து விட்டு மீதி சில்லறைக்காக என் விரல்கள் நடனமாடிக்கொண்டு இருந்தது முதலாளியின் மேஜையில்..

எப்போதும் போல் முதலில் ஒரு புன்னகையை எனக்கு கொடுத்துவிட்டு இரண்டு ஐம்பது பைசாவை மேஜையின் மீது வைத்தார்.என்னமோ ஐம்பது பைசா பறந்து விடுவது போல் என் விரல்கள் பைசாக்களை மேசையோடு அழுத்திக்கொண்டு மீதி சில்லறைக்காக முதலாளியை பார்த்தது.

அவரோ என்னை பார்த்தார் மீதியை கொடுத்துவிட்டது போல்...அதனால் விரல்களை விளக்கிவிட்டு மீண்டும் பார்த்தேன் அதே தலை குப்பிற கிடக்கும் இரண்டு ஐம்பது காசுகள்.....

ஒரு ரூபாய் தான் இருக்கிறது என்று சொன்னேன்...உடனே இரண்டில் ஒரு ஐம்பது பைசாவை திருப்பி போட்டார் மேஜையில் ...அடடா மோடி வித்தைக்காரன் தோற்றுவிடுவான் போல ,ஐம்பது பைசா என நினைத்திருந்த காசு இப்பொழுது ஐந்து ரூபாய்....

புதிய ஐந்து ரூபாயாம்.!!!!! .பக்கத்தில் பணம் நீட்டிக்கொண்டிருந்த ஒரு பிரதிநிதியின் எரிச்சல் கலந்த விளக்கத்தில் புரிந்தது ...

அன்று சனிக்கிழமை என்பதால் இருசக்கர வாகனத்திற்கு விடை கொடுத்துவிட்டு நகரப்பேருந்தில் அலுவலகம் செல்வது வாடிக்கை...இது என்ன வேடிக்கை என்று சொல்கிறீர்களா ???? வேடிக்கைதான்.... பேருந்தில் ஜன்னலோரத்தில் அமர்ந்து கொண்டு பார்க்கும் வேடிக்கை இரு சக்கர வாகனத்தில் போகும்போது கிடைக்குமா?? அதுவுமில்லாமல் அப்படியே மாலையில் அலுவலகத்தில் இருந்து சொந்த ஊருக்கு போக புற நகர் பேருந்து நிலையம் சென்று விடலாம் இரு சக்கர வாகன ஸ்டாண்டின் கவலையின்றி...

விசயத்திற்கு வருவோம்....மோடி வித்தையில் மீளாத நான் நகரப்பேருந்தில் ஏறி அமர்ந்தேன் அலுவலகம் செல்ல....அந்த ஐந்து ரூபாயை எடுத்து டிக்கெட் வாங்கும் போது அது புதிய ஐந்து ரூபாயென சொல்ல மறக்கவில்லை,,ஒருவேளை அவரும் என்னைப்போல் ஐம்பது காசு என்று நினைத்து விட்டு பையில் போட்டு விட்டால் என்னிடம் இல்லை வேறு சில்லறை...இருப்பதோ வெறும் நூறு ரூபாய் நோட்டுகள்... அப்புறம் நடத்துனரின் வசவுகளுக்கு சக பயணிகள் மட்டுமின்றி நூறு ரூபாயில் இருந்து காந்தி தாத்தாவும் கூட சேர்ந்து சிரிப்பார் நம்மைப்பார்த்து...

நல்ல வேலை எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை,...டிக்கட்டும் மீதி சில்லரையும் வந்த பிறகுதான் என் சுவாசம் எனக்கு விசுவாசமானது.

அப்பொழுதுதான் நினைத்து பார்த்தேன் ,இந்த புதிய ஐந்து ரூபாய் மூத்த குடிமக்களை எப்படி பாடாய் படுத்துகிறதோ என்று ?.

உறவாலும், சுற்றத்தாலும் உள்ளத்தில் துவண்டு போயிருக்கும் நம் மூத்த குடிமக்கள் பொதுவாக தன் சட்டைபையிலும் ,சுருக்கு பையிலும் கையால் சில்லறையை தடவி பார்த்து 1 ரூபாய் ,5 ரூபாய் ,50 காசு என்று பதம் பிரிப்பது தான் வழக்கம். ஏற்கனவே உள்ள ஐந்து ரூபாய் சுற்றளவில் 50 காசு போல் இருந்தாலும் சற்றே தடிமனாக இருந்து சிறிதளவு அடையாளம் காண முதியவர்களுக்கு உதவி செய்கிறது.

ஆனால் தற்போது எனக்கு கிடைத்த இந்த ஐந்து ரூபாயோ சாட் சாட் ஐம்பது காசு போல் பளபளவென அதே தடிமனில் மின்னுகிறது.

ஒரு வேலை இந்த ஐம்பது காசும் இன்னும் சிறிது காலத்திற்குள் 20,25 பைசாக்களை போல வழக்கொழிந்து விடும் என்று எண்ணினார்களோ இந்த புதிய 5 ரூபாயை வடிவமைத்தவர்கள்??? புரியவில்லை ஒன்றும் எனக்கு...

Wednesday 11 March, 2009

மொக்கைச்சாமி.......!!!!

மொக்கைச்சாமி, மொக்கைச்சாமின்னு ஒருத்தன். கடவுளை நோக்கி ரொம்ப நாளா தவம் இருந்தானாம். என்னடா வரம் வேணும்னு கடவுள் கேட்டாராம். இவன் சொன்னானாம்..

“கடவுளே.. எனக்கு சாவே வரக்கூடாது”

“அப்படியே ஆகுக”ன்னு சொல்லிட்டு சிரிச்சுட்டே போய்ட்டாராம் கடவுள்.

ரொம்ப நாள் காட்டுல தவம் இருந்தவன் வரம் பெற்ற இறுமாப்புல நெஞ்சை நிமித்தி நடந்து வந்துட்டிருக்கறப்ப.. ஒரு சாமியார் எதிர்ல வந்து “யாரப்பா.. நீ?”ன்னு கேட்டாராம்..

இவன் சொன்னானாம்... “மொக்கைமாமி”

பாவம்.. அவனுக்கு ‘சா’வே வரல!

Friday 13 February, 2009

ஜென் கதை

முதல் பதிப்பை நல்ல கருத்தோட ஆரம்பிக்கலாம்னு ரொம்ப யோசிச்சு ஜென் கதையை தேர்ந்தெடுத்தேன் (சுட்ட பழம் தான் ,,ஹி ஹி ஹி)

ஜென் துறவி ஒருவர் ஆளரவம் ஏதுமற்ற ஒரு மலையடிவாரத்தில் தனிமையுடனும் எளிமையுடனும் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் இரவு திருடன் ஒருவன் பொருட்களைக் களவாடிச் செல்லும் நோக்கத்துடன் துறவியின் குடிசைக்குள் பிரவேசித்தான். தேடித்தேடிப் பார்த்தும் அங்கு ஒன்றும் கிடைக்கவில்லை. வெளியில் போயிருந்த துறவி திரும்பி வந்ததும் அவரைப் பிடித்துக் கொண்டான். "பாவம் நீண்ட தூரம் பயணித்து எதிர்பார்ப்புடன் வந்திருப்பாய். ஏமாற்றத்துடன் எதற்குத் திரும்ப வேண்டும். எதை வேண்டுமானலும் எடுத்துக் கொள் என்று சொல்லி அவன் முன் நின்றார். ஒன்றும் கிடைக்காத கோபத்தில் இருந்த திருடன் அவர் அணிந்திருந்த ஆடைகளைக் கழற்றிக் கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடிப்போனான். நள்ளிரவில் நிர்வாணத்துடன் நிலவை வெறித்துப் பார்த்து உட்கார்ந்திருந்த துறவி மிகுந்த வருத்தத்துடன் முணுமுணுத்தார்.

"பாவம். இந்த அழகிய நிலவை அவனுக்குப் பரிசாகத் தரலாம் என்று நினைத்தேனே''...

-அதுக்குதான் நாம கடவுள்கிட்ட வேண்டும்போது ,அது வேண்டும் இது வேண்டும்னு கேட்க கூடாதுன்னு சொல்வாங்க ஏன்னா நாம நம்ம லெவலுக்கு தான் கேட்போம்,அதுவே அவர்கிட்ட விட்டுட்டா அவர் லெவலுக்கு தருவார்-அப்டிங்கறது என்னோட புரிதல்.