Wednesday 27 May, 2009

நான் மனிதன் தானா ???

தமிழ் ஊடகங்களும் ஆங்கில ஊடகங்களும் ,ராஜபக்ஷேயையும் புலித்தலைவர் பிரபாகரனையும் தன் முக்கிய செய்திகளாக மக்களுக்கு எடுத்துசென்றுகொண்டிருந்த வேளையில்...நானும் வருத்தத்தில் மூழ்கிபோனேன் தொடர்ந்து வந்த செய்திகளில் சர்ச்சைகளிலும்,தோல்வியிலும்...அடுத்த நாள் செய்திக்காக மீண்டும் காத்திருந்தேன்...

தமிழன் தானே அப்படிதான் இருந்தேன்..பக்கத்துக்கு நாட்டில் நடந்தால் எனக்கு செய்தி,பக்கத்துக்கு மாநிலத்தில் நிகழ்ந்தால் எனக்கு செய்தி,பக்கத்து ஊரில்,பக்கத்து தெருவில், பக்கத்து வீட்டில் நடந்தாலும் அது எனக்கு செய்திதான் ...என்வீட்டில் நிகழ்ந்து என்னை என்ன சேதி என்று கேட்கும் வரை எனக்கு அனைத்தும் செய்தி செய்தி....

கருகிய குழந்தையை மடியிலும் கலங்கிய குழந்தையை தோளிலும் போட்டுக்கொண்டு கதறிய ஈழத்தாயின் புகைப்படத்தை பார்த்தபொழுது,என் கண்ணீர் என்னை இகழ்ந்தது.....

வெகு சிலரால் ஊடகங்கள் வாயிலாக (திரு.ஞானியும்,திரு.மாலன்..., ) மக்களுக்கு முன்வைக்கப்பட்ட இருட்டடிப்பு செய்யப்படும் விசயங்களை நான் அறிந்தபொழுது .... எனக்கு செய்திகளாக பெரும்பான்மை ஊடகங்கள் முன்வைத்த (திணித்த)விஷயங்களின் போலித்தன்மை புரிந்தது,ஊடகங்கள் கைக்கூலிகளாக பயன்படுத்தபடுவதும் புரிந்தது....

இருட்டடிப்பு செய்யப்பட்ட,இறையாண்மையை பாதிக்காத வகையில் மனிதபிமான அடிப்படையில் மாநில மத்திய அரசுகள் செய்யத்தவறிய விஷயங்கள் என்னை மிகவும் வேதனைபடுத்துகிறது தினமும்....

உங்களுக்கு விருப்பம் என்றால் செல்லலாம் என்று விடுதலை புலிகள் தரப்பில் சொன்ன பிறகு வன்னி காடுகளில் இருந்து இலங்கை அரசின் முகாம்களுக்கு தகப்பன்,தாய்,மகள்,மகனுடன் வந்த குடும்பங்களை நிர்வாணப்படுத்தி 4 கி.மீ வரை நடக்க வைத்திருக்கிறார்கள் காட்டில் ........கேட்டதற்கு விடுதலை புலிகள் ஊடுருவி விடகூடாதென்பதற்காம்...

இந்தக்கொடுமை முன்பே தெரிந்துதான் கடலன்னை அன்றே வந்தாலோ சுனாமியாக, வந்தெடுத்து அவள் மடியில் போட்டுக்கொண்டு என் இனம் மானம் காக்க,...இது புரியாமல் அப்பொழுதெல்லாம் திட்டிதீர்தேனே கடலன்னையை.....

திறந்த வெளி முகாம்களில் அனுமதிக்கும் பொழுதும் சிறார்கள்,ஆண்,பெண் என்று பிரிக்கப்பட்டு குடும்பங்களை சிதறடித்திருக்கிறார்கள்...இது ஏன் என்று கேட்டதற்கும் முகாம்களுக்கு வரும் நபர்களின் பெயர் பட்டியல் தயாரிக்க செஞ்சுலுவை சங்க பிரதிநிதியையாவது அனுமதியுங்கள் என்பதற்கும் பதில் இல்லை அரசு தரப்பில்..இந்த ஒரு உதவியாவது ,செஞ்சுலுவை சங்க பிரதிநிதியை பட்டியல் தயாரிக்க இந்தியா இலங்கை அரசை நிர்பந்தித்து அனுமதி வாங்கி தந்திருந்தால் கூட போதும் முகாம்களில் இராணுவத்தால் காணாமல் போகும் ஈழ தமிழர்களின் எண்ணிக்கையை குறைத்திருக்கலாம்...

இளைஞர்களை புலிகள் என்று சந்தேகிப்பதாக கூறி அழைத்து சென்று, பௌத்த பூமியான சிறீலங்காவின் பணக்கார வியாதியஸ்தர்களின் பழுதுபட்ட உள்ளுறுப்புகளை மாற்ற என் ஈழ தமிழ் இளைஞனின் உடல்களை கூறு போடுகிறார்களாம்...இளைஞனுக்கு இந்த கதியென்றால் ஈழத்தமிழச்சியின் நிலை சொல்லி புரிய வைக்க வேண்டியதில்லை...

ஒபாமாவும் வன்மையாக கண்டித்தது இதைதான்,போர் இலங்கை இராணுவத்திற்கும் புலிகளுக்கும்...இதில் தலையிட நான் விரும்பவில்லை ஆனால் அப்பாவி பொதுமக்கள் ஏன் சூறையாடபடுகிறார்கள்....அமெரிக்கருக்கு புரிந்தது அண்டை நாடான இந்தியாவிற்கு புரியாதா??

தலைவா ,தமிழ் வருட பிறப்பு இனி சித்திரை இல்லை தை என்றாய் ஆமாம் என்றேன்,,சில காலம் கழித்து தை இல்லை சித்திரை தான் என்றாய் ஆமாம் என்றேன்,..பிரபா என் நண்பன் என்றாய் ஆமாம் என்றேன்.,,இல்லை இல்லை அவர் என் நண்பன் இல்லை என்றாய் அதற்கும் ஆமாம் என்றேன்...மத்தியிலும் மாநிலத்திலும் கூட்டாட்சி இருந்தால் தமிழர்களுக்கு நல்லது என்றாய்,ஆமாம் என்று தேர்தலில் வெற்றிபெற வைத்தேன்....

ஈழதமிழன் இனம் காக்க கடிதம் ,மத்தியில் பதவி வாங்க நான்கு நாட்கள் தலைநகரம் செல்கிறாய் நாற்பது நபர்களை சந்திக்கிறாய் ,வியாபாரம் படியவில்லை என்று கோபித்துக்கொண்டு திரும்புகிறாய்....சந்தித்த நாற்பதில் நால்வரிடம் ,அடைந்த கோபத்தில் நாலு சதவிகிதத்தை, இழக்க வேறெதுவும் இல்லாமல் உயிரை மட்டும் வைத்திருக்கும் ஈழ மக்களை காக்க செஞ்சுலுவை சங்கத்தையும்,மனிதஉரிமை சங்கத்தையும் முகாம்களில் அனுமதிக்க சிறீலங்க அரசை இந்தியா நிர்பந்திக்க கேட்டிருக்கலாமே ?.....போதும் தலைவா..உன் இனம் காக்கும் குணம் புரிந்துவிட்டது ...தமிழுக்கு தலைவனாய் இருந்துவிட்டு போ இனி தலைவனில்லை இந்த தமிழனுக்கு.....

ஜூனியர் விகடனுக்கு ஒரு பெங்களூர்வாசி பெண்மணி எழுதிய கடிதம்...பதினான்கு வருடங்களுக்கு முன்னாள் சொந்த வீட்டை விட்டு வன்முறையாளர்களால் விரட்டி அடிக்க பட்டதும்,ஒரே ஒருநாள் அகதியாக தான் பட்ட அவஸ்தைகள் பதினான்கு வருடம் கழித்தும் என் மனதை விட்டு அகலாமல் தன்னை வருத்துகிறது.அப்படியிருக்க நம் ஈழத்தமிழனின் நிலைமை என்னை மிகவும் கவலைக்குள்ளாக்குவதாக சொல்லியிருக்கிறார்....

ஒரே ஒரு நாள் அகதியாய் வாழ்ந்து பார்த்தால்தான் அந்த வலி புரியுமோ எனக்கு??...

இவ்வளவையும் பார்த்துகொண்டும் ,கேட்டுக்கொண்டும் இருக்கும் நான் தமிழன் தானா ???

என்று கேட்க போவதில்லை என் இயலாமைக்கு இறையாண்மையை கைகாட்டி என்னை மேலும் கொச்சை படுத்திக்கொள்ளவும் விரும்பவில்லை.... நான் கேட்பதெல்லாம் முதலில் நான் மனிதன் தானா ???

Monday 18 May, 2009

" பசங்க " திரைப்படம் பார்த்தேன் வியந்தேன்

தமிழ் திரையுலகம் காணாத கதைக்களம் என்று கேள்வி பட்டதால் சென்று பார்க்க ஆவலாய் இருந்தது...ரொம்ப நாளைக்கப்புறம் குடும்பம் குடும்பமாக திரையரங்கு நிரம்பியிருந்தது (சிறுவயதில் பார்த்ததாக நினைவு) மிகவும் ஆச்சரியமாக இருந்தது எனக்கு.......வித்தியாசமான சுழலில் (என்னை சுற்றி வாண்டுகள் நிரம்பி இருந்தார்கள்) படம் பார்த்தது இதுவே முதல் முறை எனலாம்...

படத்தின் பெயர் போடும் பொழுதே நம்மை நமது சிறுவயதிற்கு அழைத்து சென்று விடுகிறார் இயக்குனர்... ஜீவா,பக்கடா,குட்டி மணி இவர்களின் என்ட்ரி பட்டையை கிளப்புகிறது திரையரங்கில்...

சிறுவயதில் நாம் அனைவருமே பைக் ஓட்டியிருக்கிறோம் டுர் டுர் என்று...நமது இந்த நிகழ்வை இயக்குனர் படத்தில் கையாண்டிருக்கும் விதத்தில்,அப்பாவின் கைப்பிடித்து செல்லும் குழந்தை போல் நாமும் படத்தில் ஒன்றிவிடுகிறோம்.....

அன்புக்கரசு IAS பைக் ஓட்டுவது போல் பாவித்து வண்டியை கிளப்ப கையை முறுக்கும் பொழுது அவன் கையிடுக்கில் சூரியனை காட்டி ஒளிப்பதிவாளர் மிடுக்காக தோன்றுகிறார்....மேலும் ஒரு காட்சியில் அப்பத்தா என்று அழைக்கப்படும் கண்ணாடி அணிந்த சிறுவனை ஜீவா மிரட்டும் பொழுது கேமராவில் மூக்குகண்ணாடியை பொருத்தி அச்சிறுவன் பார்வையில் ஜீவாவை காட்டும் விதம் சபாஷ்....

அன்புக்கரசுவின் சித்தப்பாவாக (LIC ஏஜென்ட்) வரும் மீனாச்சி சுந்தரமும் ஜீவாவின் அக்கா ஷோபிகன்னு கதாபாத்திரமும் நம் மனதில் இடம் பிடிக்க தவறவில்லை..இருவருக்குமிடையான வம்பிழுக்கும் காட்சியில் கலகலப்பிற்கு குறைவில்லை... இரு குடும்பத்திற்கும் சிறுவர்களால் சண்டை வரும்பொழுது இவர்களின் தவிப்பு மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது...

இந்த சண்டையினால் தங்கள் காதல் கனவு நிறைவேறாது என்று வருந்தும் காட்சியில், நாம பழகுனதுக்கு ஒரு LIC பாலிசியாவது போட்டுக்கோ என்று மீனாட்சி சுந்தரம் சொல்லி கலகலப்பூட்டி காட்சியின் கடின தன்மையை சற்றே குறைத்தும் கமெர்சியல் படங்களுக்கான நேர்த்தியை மிகவும் லாவகமாக இந்த படத்தில் இயக்குனர் கையாண்டிருக்கிறார் என்று சொல்லலாம்...

பசிக்கும் தருனங்களில் "திங்க தேடுது" என்று பக்கடா சொல்லும் வார்த்தைகளும் ,தோள் மேல கை போடாதடா குட்டையாயிடுவேன்,ஏற்கனவே என்னையை குட்டி மணின்னு கூபிரானுங்க என்ற வசனங்களும் நம்மை எங்கோ அழைத்து செல்வது தவிர்க்க இயலாதது...

முதல் முறையாக ஒரு நல்ல பாடம் பார்த்த திருப்தியில் திரையரங்கை விட்டு வெளியேறினோம்...

சிறுவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு நல்ல பாடத்தை நாசுக்காக சொல்லிகொடுக்கும் இயக்குனரின் திறமை நம்மை மலைக்க வைக்கிறது...படம் முழுவதும் சுவாரஸ்யமான காட்சிகளால் நிறைத்து நம் மனதில் இடம் பிடிக்கிறார் இயக்குனர்...

சமீப காலமாக வந்த ஈரக்கொலை நடுங்கும் காட்சிகள் நிறைந்த படங்களை சிறுவர்களை வைத்தே கலாய்திருப்பது மிக அருமை ..

இயக்குனர் இப்படத்தில் கருப்பொருளாக கையாண்டிருக்கும் "சகிப்புத்தன்மை" யையும்....நம் எல்லோருடைய மனமும் ஏங்கிகிடப்பது ஒரு சின்ன பாராட்டுதலுக்காகத்தான் என்பதையையும் மிக இயல்பாக சொல்லியிருக்கிறார்...

இயக்குனர் பாண்டிராஜ் அவர்களுக்கும் அவருக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் இயக்குனர்-சசிகுமார் அவர்களுக்கும் இந்த சினிமா ரசிகன் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்...

பசங்க - நிஜங்க....