Wednesday 15 April, 2009

உங்கள் DVD பிளேயரில் டால்பி டிஜிட்டல் மட்டும் தான் உள்ளதா ?? DTS 5.1 ஆக மாற்ற விரும்புகிறீர்களா ???

நம்மிடம் ஒலி அமைப்பு (Sound System) முறைகளில் DTS சிறந்ததா ? டால்பி டிஜிட்டல் சிறந்ததா ? என்று கேட்டால்....என்னவென்று சொல்வோம் ? சிறிதும் தயக்கம் இல்லாமல் DTS ஒலி அமைப்பே சிறந்தது என்று...DTS சிறந்ததுதான் ஆனால் எந்த சந்தர்பத்தில் என்பதுதான் கேள்வி.....

முதலில் திரையரங்குகளில் எப்படி ஒளி, ஒலி அமைப்புகள் இருந்தது என்று பார்ப்போம்...பேசும் திரைப்படங்கள் வருவதற்கு முன் ஒளிசுருள் திரையரங்கிற்கு அனுப்பப்படும்...அதனை ப்ரொஜெக்டர் மூலம் திரையில் நிழற்படமாக காட்டப்பட்டு வந்தது..பின்னர் பேசும் திரைப்படங்கள் வெளியிடபடுவதற்காக, திரைபடத்தின் ஒலிசெய்திகள்(வசனங்கள்,இசை..) அந்த படத்தின் ஒளிசுருளின் பக்கவாட்டில் உள்ள துளைகளுக்கு இடையில் கருப்பு கோடுகளாக குறிக்கப்பட்டது...ப்ரொஜெக்டரில் இருந்து வரும் ஒளி இந்த கருப்பு பட்டிகளில் பட்டு ,நிறத்தின் அடர்திகளுக்கு ஏற்ப ஒளி குன்றி மறு பக்கத்தில் உள்ள ஒளி உணர்வி&சக்தி மாற்றி மூலம் மின்னோட்ட அலைகளாக மாற்றப்பட்டு அவை ஒலிப்பான்களிள் ஒலியாக மாற்றபடுகிறது.

டால்பி டிஜிட்டல் முறையில் திரைபடத்தின் ஒளிசெய்திகள் (வசனங்கள், இசை, சுற்றுப்புற சத்தங்கள்....) ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டு அவைகள் ஒளிசுருளின் பக்கவாட்டில் புதிய முறைப்படி நிற பட்டைகளாக குறிக்கப்படுகிறது.... அவைகள் திரையரங்குகளில் தனி தனி 6 ஒலிப்பான்களிள் வெளியிடபடுகிறது.

DTS ஒலி முறையில் ஒலிசெய்திகள் ஒளிசுருளின் பக்கவாட்டில் குறிக்கப்படாமல் தனி காம்பேக்ட் டிஷ்குகளில் பதியப்பட்டு தனியாக திரையரங்கிற்கு வருகிறது. படமும் சப்தங்களும் புதிய தொழிநுட்பத்தின் உதவியுடன் ஒன்றிணைக்கப்படுகிறது..இதனால் மொழி மாற்ற படங்களுக்கு தனி தனி ஒளிசுருள் தயாரிக்கவேண்டிய செலவுகள் குறைகிறது....

ஆக விஜயகாந்த் சின்னகவுண்டர் திரைப்படத்தில் பஞ்சாயத்து காட்சியில் சொல்வது போல( "இவர் குஸ்தி போட தெரிஞ்ச குஸ்தி வாத்தியாரே தவிர பாடம் சொல்லி தர கணக்கு வாத்தியார் இல்லைன்னு" ) , இவையிரண்டு தொழில்நுட்பங்களும் திரைஅரங்குகளில் பயன்படுத்த உருவாக்கபட்டவைகளே தவிர DVD களில் ஒலி செய்திகளை பதிய உருவாக்கப்படவில்லை...

DVD களில் இவை இரண்டும் நம்மால் பிரித்தறிய முடியும் அளவிற்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்துவதில்லை என்பதே உண்மை......

Saturday 11 April, 2009

டெக்னாலஜி இம்ப்ரூவ்டு டூ மச்.....

அதிகாலை 6 மணிக்கெல்லாம் எழுந்துவிட்டேன், எப்படியும் இன்று பணத்தை ஐசிஐசிஐ வங்கியில் 9 மணிக்குள் என் சேமிப்பு கணக்கில் போட்டுவிட வேண்டும் என்று அவசரமாக கிளம்பி, வண்டியை கிளப்பிக்கொண்டு திருச்சி சாலையில் உள்ள ஐசிஐசிஐ வங்கிக்கு 8 மணி அளவில் சென்றுவிட்டேன் வங்கியை திறந்து இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்......

வங்கியும் திறந்தே இருந்தது கண்டு சுக்கிரன் என் பக்கம் தான் என்று உள்ளே நுழைந்து சலானையும் பூர்த்தி செய்து விட்டாயிற்று ஆனால் அங்கு காசோலை டெபாசிட் செய்யும் தானியங்கி எந்திரத்திற்கு நிற்கும் வரிசையை தவிர யாரும் இல்லை....எண்ணிய பணத்தையே 101 வது தடவையாக எண்ணியாயிற்று, சலானையும் சரிபார்தாயிற்று ஆனால் அலுவலர்களை காணவில்லை....

பொறுமையிழந்து வங்கி வாயிலில் நின்றியிருந்த காப்பாளரை விசாரித்ததில், அவர் உள்ளே நிற்கும் வரிசையில் நின்று பணத்தை தானியங்கி எந்திரத்தில் செலுத்த சொன்னார்...அப்பொழுதுதான் புரிந்தது அது காசோலை செலுத்தும் எந்திரம் இல்லை பணம் செலுத்தும் தானியங்கி எந்திரம் என்று....

அவசரமாக உள்ளே சென்று பார்த்தபொழுது வரிசையில் நாலைந்து பேரும் , அட்டு பசங்களுக்குத்தான் லட்டு மாதிரி பெண்டாட்டி கிடைப்பாள் என்பதை மெய்யாக்கும் விதமாக ஒரு ஜோடியும் நின்று கொண்டிருந்தது...அவசரமாக வரிசையில் நிற்க முயன்றபொழுது இடுப்பில் கைலியும் முகத்தில் கிலியுடனும் வந்த ஆசாமியால் பின்னுக்கு தள்ளபட்டேன்....

வரிசை முன்னேறிக்கொண்டு இருந்து, ஒரு பிரதிநிதி தானியங்கி எந்திரத்தில் பணம் செலுத்த உதவி செய்துகொண்டு இருந்தார். ஆசுவாசப்படுத்திக்கொண்ட கிலி ஆசாமி என் கையில் இருந்த சலானை கவனித்துவிட்டு, இதுக்கு எதுவும் வேண்டாம் தம்பி என்று நமட்டு சிரிப்பு சிரித்தார் .... அதனால் சலானை மடித்து சட்டை பையில் வைத்துக்கொண்டு வரிசையை கவனித்தேன்...அந்த ஜோடி வைத்ததில் ஒரு ஐநுறு ரூபாயை எந்திரம் அடையாளம் கண்டுகொள்ள முடியாதலால் மீதமுள்ள பணத்தை மட்டுமே செலுத்த முடியும் என்று பிரதிநிதி சொல்லக்கேட்டது என் மனதை சற்றே மகிழ்வித்தது.....

நமக்கும் இது நடந்து விடக்கூடாது என்று அவசரமாக இரண்டு மூன்று நோட்டுக்களை அதிகமாக எடுத்துக்கொண்டு இருந்தபொழுது , கிலி ஆசாமிக்கு பணம் செலுத்த அந்த பிரதிநிதி உதவி செய்துகொண்டு இருந்தார்... நேரம் கரைந்து கொண்டு இருந்தது , 9 மணிக்கெல்லாம் இங்கிருந்து கிளம்பினாள்தான் அலுவலகத்திற்கு 9.30 மணிக்குள் செல்ல முடியும் என்று நினைத்துகொண்டிருக்கும் பொழுது பிரதிநிதி சத்தமாக கிலி ஆசாமியிடம் என்னமோ சொல்லிகொண்டிருந்தார்.....

" யோவ் இதுக்கு சலான் தேவை இல்லைதான் ஆனா யாருக்கு பணம் போட வேண்டுமோ அவருடைய வங்கிகணக்கு எண் கூட இல்லை என்றால் எப்படீங்க பணம் போட முடியும் ".... என்று சொல்லிக்கொண்டே என் பணத்தை வாங்கி எந்திரத்தில் செலுத்தி வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்ததுதான் தாமதம் உடனே குருஞ்செய்தி ஐசிஐசிஐ வங்கியில் இருந்து வந்து விட்டது என் கணக்கில் அந்த பணம் வந்து விட்டதாக.........

சாதனை புரிந்துவிட்ட மமதையில் வண்டியில் சாகசம் புரிந்துகொண்டு அலுவலகம் அடைந்துவிட்டேன் முதல் ஆளாக..........